சிறைக் கைதிகளும் மனிதர்களே! - Tamil News சிறைக் கைதிகளும் மனிதர்களே! - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » சிறைக் கைதிகளும் மனிதர்களே!

சிறைக் கைதிகளும் மனிதர்களே!

Written By Tamil News on Sunday, July 21, 2013 | 2:08 AM

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான திறமைகள் உண்டு. அவன் ஏதோ குற்றம் செய்த காரணத்திற்காக சிறைக்கு தண்டனை அனுபவிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டதனால் அவனது திறமையை இல்லாமல் செய்வதற்கு எவரும் முயற்சிக்கலாகாது.

எஹலபொல மகா அதிகாரம் வளவ்வ கட்டடத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர்களும் மத்திய மாகாண முதலமைச்சர், மத்திய மாகாண ஆளுநர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.


சிறைச்சாலைகள் கைதிகளை நல்வழிப்படுத்தும் புனர்வாழ்வு முகாம்களாக மாற்றும் போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறமை என்ன என்பதை கண்டறிந்து அந்தத் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சித்திரவதை முகாமாகவும், சிறைச்சாலையாகவும் இருந்துவந்துள்ள கண்டி எஹெலபொல மகா அதிகாரம் வளவ்வ கட்டடத்தை 195 ஆண்டுகளுக்கு பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சு பொறுப்பேற்கும் வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, எமது வரலாற்று பெருமைகளை உலகிற்கு வெளிக்காட்டி தேசிய உரிமைச்சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.

மனித சமுதாயத்தில் சிறைச்சாலைகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. பண்டைக் காலத்தில் மன்னர்கால ஆட்சியின் போது சிறைச்சாலைகள் குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்கும் ஓர் இடமாகவே இருந்தது.

ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டால் அவன் விடுதலை பெற்று சிறையில் இருந்து வெளிவர முடியாது, அவன் பல்லாண்டு காலம் சிறையில் ஒரு மிருகத்தைப் போன்று அடைக்கப்பட்டு உண்பதற்கு போதியளவு உணவும், உறக்கமும் இன்றி நடைப்பிணமாக இருந்து இறுதியில் மடிந்து போவான்.

அன்று ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டால் அவன் இருக்கிறானா, இல்லையா என்று கூட சிறை அதிகாரிகள் பார்க்க மாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் ஒரு கைதிக்கு பல நாட்களாக உணவும், அருந்துவதற்கு நீரும் கிடைக்காமல் பசியோடு வாட வேண்டி இருந்தது.

20ம் நூற்றாண்டில் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் சிறைச்சாலைகளை சீர்திருத்த நிலையங்களாக மாற்றி குற்றம் இழைத்தவன் தண்டனைக் காலம் முடியும் வரையில் அங்கு நல்ல முறையில் பராமரிக்கப்படுதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இலங்கையிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறைச்சாலைகள் இவ்விதம் குற்றம் இழைத்தவனை திருத்தி மீண்டும் அவனை நல்ல மனிதனாக சமுதாயத்தில் வாழ வைப்பதற்கான சீர்திருத்த நிலையங்களாக இருந்தன. ஆயினும் சனத்தொகை பெருக்கம், குற்றம் புரிவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இருந்த வசதிகள் குறைந்தன. முன்னர் 100 கைதிகள் வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியில் இப்போது சுமார் 300 கைதிகள் வைக்கப்படுகிறார்கள்.

1818ல் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக போராடிய கெப்பட்டிபொல மற்றும் அவர்களின் சகாக்கள் 53பேரை சிறைவைத்து சித்திரவதைக்குட்படுத்தி சிரச்சேதம் செய்யப்பட்டதாக கூறப்படும் கண்டி எஹலபொல மகா அதிகாரம் வளவ்வ கட்டடத்தை நகர அபிவிருத்தி அமைச்சு பொறுப்பேற்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

வரலாற்றின் படி இதுபோன்று 18 கட்டடங்கள் கண்டியில் இருந்ததாகவும் தற்போது கண்டி குயின்ஸ் ஹோட்டல் அமைந்துள்ள கட்டிடம், பிலிமத்தலாவ ரெஜிமன்ட் அமைந்துள்ள கட்டிடமும், கண்டி மாநகர சபை கட்டிடமும் இவற்றில் அடங்குகின்றன. தற்போது நகர அபிவிருத்தி அமைச்சு பொறுப்பேற்கும் எஹலபொல வளவ்வ அக்காலத்தில் இருந்தே சிறைச்சாலையாக நடத்தப்பட்டு வந்துள்ளது. தலதா மாளிகைக்கு அருகில் இதுபோன்ற சிறைச்சாலை ஒன்றை வைத்திருக்க விரும்பாததால் தற்போது இச்சிறைச்சாலை பல்லேகலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளுக்கு தேவையான கழிவறை மற்றும் ஸ்நானம் செய்வதற்கான வசதிகளும் மிகவும் குறைவாக இருக்கின்றது. இத்தகைய காரணங்களினால் சிறையில் உள்ள சில பணவசதி உடைய கைதிகள் தங்களுடைய வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காக சிறைச்சாலையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு கைலஞ்சம் கொடுத்து அந்த வசதிகளை பெறுகிறார்கள்.

கைதிகளை திருத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறைச்சாலைகள் இன்று குற்றம் புரிவதற்கு பயிற்சி அளிக்கும் கலாசாலைகளாக மாறிவருவதாக ஒரு சமூகவியல் ஆய்வாளர் குறிப்பிடுகிறார். முன்னர் ஒரு கைதி சிறைக்குச் சென்றவுடன் அவன் மது அருந்துபவனாக அல்லது புகை பிடிப்பவனாக இருந்தால் அந்த தீய பழக்கங்களை சிறையில் இருந்து வெளியேறும் வரை விட்டுவிட்டு அவன் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவை மட்டும் உண்டு இருந்தான்.

ஆனால் இன்று சிறைச்சாலையில் எதனையும் விலை கொடுத்து வாங்கக் கூடிய அளவுக்கு ஒழுக்கக்கேடு ஏற்பட்டுள்ளது. மது அருந்தும் கைதிக்கு தேவையான அளவு மதுவையும் புகைப்பவர்களுக்கு தேவையான சிகரெட், பீடி போன்றவற்றையும், போதை பொருள் பாவனையாளர்களுக்கு தேவையான போதை வஸ்துக்களையும் கொண்டு வந்து கொடுப்பதற்கு சிறை அதிகாரிகள் தாயாராக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சித்திரவதை முகாமாகவும், சிறைச்சாலையாகவும் இருந்து வந்த கண்டி எஹெலபொல மகா அதிகாரம் வளவ்வ கட்டடம்

சன்னஸ் பத்திரத்தை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பதைப் படத்தில் காணலாம்.

கெப்பட்டிபொலவுடன் அவர்களின் சகாக்கள் பங்கேற்ற போராட்ட சம்பவங்கள் சிறைக்கைதிகளின் நடிப்பில் ஜனாதிபதி முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட போது...

எஹலபொல மகா அதிகாரம் வளவ்வ கட்டடத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவத்தில் கண்டி ரஜவீதியில் இருந்து அரசர்கால வரலாற்றை சித்தரிக்கும் பல அம்சங்களுடன் (சன்னஸ்பத்திரம்) ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த நிகழ்வை ஜனாதிபதி அவர்கள் எஹலபொல மாளிகையில் இருந்து கண்டுகளித்தார்.

சன்னஸ் பத்திரத்தை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நகர அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இதன்போது ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் கெப்பட்டிபொலவுடன் அவர்களின் சகாக்கள் பங்கேற்ற போராட்ட சம்பவங்கள் சிறைக்கைதிகளின் நடிப்பில் ஜனாதிபதி முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அரங்க ஆற்றுகையையும் சிறைக்கைதிகளையும் ஜனாதிபதி பாராட்டினார்.

சிறைச்சாலைகள் சுதந்திர இலங்கையில் உண்மையிலேயே ஒரு சீர்த்திருத்த கூடமாகவே அமைந்திருந்தன. சிறைக் கைதிகளுக்கு அங்கு தங்கியிருப்பதற்கு கட்டில், மெத்தை, படுக்கை விரிப்பு, தலையணை போன்ற சகல வசதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

பயங்கர குற்றமிழைத்த கைதிகள் ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டாலும் அவர்களுக்கு இது போன்ற சகல செளகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டன. அத்தகைய கைதிகளுக்கு அவர்களுடைய சிறைக் கூண்டுக்குள்ளேயே சுத்தமான கழிவறை ஒன்றும் இருந்தது.

அவர்கள் கூட காலையில் பூரண பாதுகாப்புடன் வந்து சூரிய ஒளியில் சுமார் அரை மணி நேரம் இருந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஸ்நானம் செய்து பிரார்த்தனை செய்த பின்னர் மீண்டும் கூண்டுகளில் அடைக்கப்பட்டனர்.

மாலையில் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் வெளியில் வந்து மற்ற கைதிகளுடன் தேக அப்பியாசம் செய்து பின்னர் முகம், கை, கால்களை கழுவி மீண்டும் அடைக்கப்படுவதற்கு முன்னர் மாலை 6.00 மணியளவில் நல்ல உணவு கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு கைதிக்கும் கணிசமான அளவு சோறு, காய்கறிகளும், ஒரு துண்டு மீன் அல்லது ஒரு துண்டு இறைச்சி உணவாக கொடுக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடான உணவு அவர்களுடைய உடம்பை கட்டாக வைத்து தொந்தி விழுவதை தவிர்ப்பதுடன், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை யும் தவிர்ப்பதற்கு பேருதவியாக அமைந்திருந்தது.

இரவில் நித்திரைக்கு செல்வதற்கு முன்னர் ஒவ்வொருவருக்கும் அரைக் கப் பிளேன்டி கொடுக்கப்படும். காலை ஆகாரமாக ஒரு கைதி விரும்பினால் கால் இறாத்தல் அல்லது அரை இறாத்தல் பாணும் பருப்பு அல்லது தேங்காய் சம்பலும் கொடுக்கப்படும். 10 மணிக்கு மீண்டும் பிளேன்டி கொடுக்கப்படுகிறது. பின்னர் நண்பகல் அளவான உணவு பரிமாறப்படுகிறது.

இவ்விதம் சிறையில் ஓரிரு மாதங்கள் இருப்பவர்கள் முன்னர் வயிறுமுட்ட சாப்பிட்டவர்களாக இருந்தாலும் இப்போது சிறிதளவு உணவை சாப்பிட்ட பின்னர் திருப்தியடைந்து ஆரோக்கியமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவுகிறதென்று வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டார்.

சிறைக் கைதிகளிடையே அன்று இன, மத பேதமின்றி ஒற்றுமை வலுப்பெற்றிருந்தது. வெசாக் காலங்களில் எல்லா இன கைதிகளும் ஒன்று சேர்ந்து வெசாக் பந்தல்களையும், வெசாக் கூடுகளையும் தயாரிப்பார்கள். அது போன்று நத்தார் பண்டிகையின் போது சிறை கைதிகளில் ஒருவர் நத்தார் தாத்தாவாக மாறுவேடம் பூண்டு சிறை அதிகாரிகளுக்கு தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் பிற அன்பளிப்பு பொருட்களை நத்தார் தாத்தாவின் கைகளின் ஊடாக கொடுத்து எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். அதுபோன்றே இந்துக்களின் தீபாவளி, தைப்பொங்கல் விழாக்களின் போதும் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகையின் போதும் எல்லோரும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்வார்கள்.

சிறைச்சாலைகளில் ஒரு கைதி சில காலம் இருக்கும் போது அது அவருடைய குடும்பமாக மாறிவிடும். அவர் சக கைதிகளை நண்பர்களாகவும், சகோதரர்களாகவுமே கருதுவார்கள். ஆனால், இந்த நிலை 1977ம் ஆண்டு ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மாறிவிட்டது.

சிறைச்சாலைகளில் இருந்துவந்த ஒற்றுமையும் அமைதியும் 1977ம் ஆண்டுக்கு பின்னர் மறைந்துவிட்டது. 1977ம் ஆண்டுக்கு பின்னர் சிறைச்சாலைக்குள் போதை வஸ்த்துக்களும், மதுவும் அறிமுகமானதை அடுத்தே சிறைச்சாலைகளில் ஒழுக்கக்கேடு ஆரம்பமானது. அதையடுத்து சிறைச்சாலைகள் பாதாள உலக கோஷ்டிகளின் தங்குமிடமாகவும் மாறியதனால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

சிறைச்சாலை மீண்டும் நல்ல பண்பாளர்களை உருவாக்கும் புனர்வாழ்வு நிலையங்களாக மாற்றும் பணியை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மனதார வாழ்த்த வேண்டும்.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கெளதமாலா சிறைச்சாலையில் எத்தனையோ அல்கைதா இயக்கத்தின் சந்தேக நபர்கள் பல்லாண்டு காலம் சங்கிலிகளினால் கைகளையும், கால்களையும் பூட்டி துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும், அமெரிக்காவில் சில சிறை உத்தியோகத்தர்கள் கைதிகளின் மேல் சிறுநீர் கழித்த வேதனைக்குரிய கேவலமான சம்பவங்களும் இடம் பெற்று இருக்கின்றன.

இதுபோன்று எமது சிறைச்சாலைகளில் ஒழுக்கம் சீர்கேடடைந்து இருக்கிறது, அங்கு பாதாள உலகத்தைச் சேர்ந்த கைதிகள் தங்களுக்கு எதிரான மற்ற கைதிகளை துன்புறுத்தும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. சிறு குற்றம் புரிந்த ஒருவன் சிறையில் இருந்து 2 ஆண்டில் தண்டனை முடிந்து வெளிவரும் அவன் பாதாள உலகில் சேர்ந்து ஒரு பெரும் குற்றவாளியாக மாறிவிடுகின்றான். அவை அனைத்துக்கும் சிறை உத்தியோத்தர்களின் நேர்மையற்ற, ஒரு தலைப்பட்சமான பணம் கொடுப்பவர்களை மட்டும் ஆதரிக்கும் நிலைதான் காரணமாகின்றது.

தற்போதைய சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் இது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்ற காரணத்தினால் சிறைக் கைதிகளின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு உதவிகள் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 200 சிறை உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 300 உத்தியோகத்தர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே கைதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை சமூகத்திற்கு மீண்டும் நல்லவர்களாக மாற்றி விடுவிக்கும் பணியை சிறைச்சாலைகள் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு முன்னர் சிறை உத்தியோகத்தர்களை நல்லவர்களாகவும், கைலஞ்சம் வாங்காதவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் நல்வழிப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை அவசரமாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.


அவ்விதம் நம் அரசாங்கம் உடனடியாக சிறை உத்தியோகத்தர்களை நல்வழிப்படுத்தி தீய செயற்பாடுகளில் ஈடுபடுவோரை வேலைநீக்கம் செய்து சிறைச்சாலை நிர்வாகிகளை சீரமைப்பது மிகமிக அவசியம் இதனை நாம் செய்யாவிட்டால் சிறை உத்தியோகத்தர்களின் அட்டகாசம் உச்சநிலை அடைந்து வேலியே பயிரை மேயும் என்ற நிலை சிறைச்சாலைகளில் ஏற்படலாம் என்பதை நாம் எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். சிறைச்சாலைகளை புனர்வாழ்வு முகாம்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான நிதி மற்றும் திட்டங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது. அதற்கு முன்னோடியாகவே தற்போது புனர்வாழ்வு நிலையங்களை ஸ்தாபித்து செயற்படுத்தி வருகிறது. கைதிகள் மத்தியில் அபார திறமை உள்ளது. அங்கு அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகள் அதற்கு சான்று பகர்கின்றன. சிறைக் கைதிகளின் புத்தாக்கங்கள் அவர்களின் திறமையை வெளி உலகுக்கு வெளிக்காட்டுவதற்கு உதவியாக அமைகின்றது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger