மனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை - Tamil News மனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை - Tamil News
Headlines News :

Hottest List

Home » » மனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை

மனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை

Written By Tamil News on Tuesday, May 7, 2013 | 8:10 AM


மிகவும் சாதாரணமான, சுவாரஸ்யமற்ற கதையைக் கொண்ட சந்திரோதயம் படத்துக்கு முத்து முத்தான பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை அனைத்துக்கும் சத்தான இசையை ஊட்டி, உலவ விட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது ஒரு வழக்கமான காதல் டூயட்தான் என்றாலும், இதை ஒரு சிற்பம்போல மிக அழகாக செதுக்கியிருக்கிறார் வாலி.

இந்தப் பாடலில் நாயகன் பாடும் வரிகள் வழக்கமானவைதான். ஆனால் நாயகியின் வரிகளில்தான் வைரங்களைப் புதைத்திருக்கிறார் இந்த வித்தகக் கவிஞர். ஒரே பாடலில் எத்தனை உவமைகள்! இத்தனை உவமைகள் நிறைந்த பாடல் வேறொன்று இருக்குமா (அத்திக்காய் நீங்கலாக) என்பது சந்தேகம்தான்.


இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்கிறார் எம். எஸ். வி. என்று தோன்றுகின்றது. பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக்கருவிகள் தடங்கலாக இருக்கக் கூடாது என்பதாலோ என்னவோ!

மிக எளிமையான துவக்க இசை கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லாங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது) ஒரு பிரமாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல மென்மையாக ஆர்ப்பாட்டமில்லாமல் இசைத்துவிட்டுப் போகிறது துவக்க இசை.

கேட்டவுடனேயே மயங்க வைக்கும் இனிமையான பல்லவியை டி. எம். எஸ். துவங்கி வைக்கிறார். பல்லவியிலேயே மூன்று உவமைகளைத் தாராளமாக அநாயாசமாக இந்தா எடுத்துக்கொள் என்பது போல எடுத்து வீசியிருக்கிறார் கவிஞர் வாலி.

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு கண்ணானதோ

பொன்னோவியம் என்று பேரானதோ

என் வாசல் வழியாக வலம் வந்ததோ

அடுத்து நாயகி தன்னைப் பற்றிப் பேசுகிறாள் நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?

குளிர்காற்று கிள்ளாத மலர்

கிளி வந்து கொத்தாத கனி

நிழல்மேகம் தழுவாத நிலவு

வியப்பாக இருக்கிறதா? ஆயினும் என்ன? இப்படிப்பட்டவளை நீ உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டாயே!

இந்த வரிகளில் நாயகியின் பெருமை தெரிகிறது. எப்படிப்பட்ட தூய்மையான பொருளை நீ அடைந்திருக்கிறாய் என்பதை நீ உணர வேண்டும்என்று நாயகனுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன இவ்வரிகள். இப்படி என்னைத் தூய்மையாக வைத்துக் கொண்டதெல்லாம் நீ உன் நெஞ்சுடன் என்னை இணைத்துக் கொள்ளத்தானா?’ என்ற (போலியான) ஆதங்கமும் இவ்வரிகளில் ஒலிக்கிறது.

இவ்வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள முடியும்.

குளிர் காற்று கிள்ளாத (என்ன அருமையான சொல்! குளிர் காற்று உடலில் படும்போது ஏற்படும் சிலிர்ப்பைகிள்ளல்என்று வாணித்திருக்கிறார். மலர், கிளி வந்து கொத்தாத கனி, நிழல் மேகம் தழுவாத நிலவு இவை எல்லாம் இயற்கையில் இருக்க முடியாதே? அப்படியானால் நான் மட்டும் எப்படி? நீ என்னை உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டதால் வேறு எந்த விதத் தீண்டல்களும் எனக்கு ஏற்படவில்லை!

குளிர்காற்று கிள்ளாத மலரல்லவோ

கிளி வந்து கொத்தாத கனியல்லவோ

நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ

எந்நாளும் பிரியாத உறவல்லவோ

இதைத் தொடர்ந்து, நாயகி நாயகனை வர்ணிக்கும் பல்லவி

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ

செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன்மாளிகை உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

பாடல் இன்னும் பாதி கூட முடியவில்லை அதற்குள் பன்னிரண்டு உவமைகளை அள்ளித் தெளித்து விட்டார் இரண்டாம் கம்பன். உவமைக் கவிஞர் என்ற பட்டம் இவருக்கும் பொருந்தும். இந்த ஒரு பாடலுக்காகவே இளம் சூரியன் உந்தன் வடிவம். செவ்வாணம் உந்தன் நிறம் என்பதெல்லாம் வழக்கமான வர்ணனைகள் ஆனால்பொன்மாளிகை உந்தன் மனமானதோஎன்ற வரியில் ஒரு பொடியை (பொறியை) வைத்திருக்கிறார் கவிஞர். ‘என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோஎன்ற அடுத்த வரியின் மூலம்நீ பொன்மனச் செம்மல்தான். ஆனால் அது எதனால்? என் காதல் உன் மனதில் உயிர் வாழ்கிறதே அதனால்தான் என் காதல்தான் பொன் அது உன் மனதில் இருப்பதால்தான் அது பொன் மாளிகை

மீண்டும் பல்லவியின் இரு வரிகளைப் பாடுகிறார் நாயகி

(இளம் சூரியன்)

இந்த இடத்தில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது ஒரு நீளமான பாடல் இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்! ஆஹாஹாஹா

என்ன ஒரு ஹம்மிங் (இதற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)

இந்த ஹம்மிங்கைக் கேட்கும் போது வேறு இரண்டு ஹம்மிங்குகள் நினைவுக்கு வருகின்றன. மூன்றையும் ஒப்பிட்டு இந்தப் பாடலின் ஹம்மிங் காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கின்றாள்.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்துபாடலில் வரும் ஹம்மிங். ஒரு இன்பக் கடலில் மூழ்கி மூழ்கி எழும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த நாயகியின் காதல் உறுதியாகி விட்ட ஒன்று.

யாருக்கு மாப்பிள்ளை யாரோவில் வரும் ஹம்மிங் நாயகியின் உல்லாசமான, குறும்புத்தனமான, சீண்டிப் பார்க்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய என்ற சரல் ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்.

தொடரும்...
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger