காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம் - Tamil News காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்

காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்

Written By Tamil News on Friday, March 8, 2013 | 5:52 AMஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததை அந்த காட்டு நாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப் புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.

ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப் புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.

எனவே, காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்கத் தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.

சிறுத்தைப் புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து, அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப் புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரான போது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது......

இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிப்பார்க்க வேண்டும்என்றது.

இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.

இந்த காட்டு நாய் சிறுத்தைப் புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கிச் சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.

அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப் புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.

எனவே, சிறுத்தைப் புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்து கொண்டது.

குரங்கு சிறுத்தைப் புலியுடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப் புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப் புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.

அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.

இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்என்று சொல்லிவிட்டு, “குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்என்றது. குரங்கு, சிறுத்தைப் புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.

இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.

அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.

அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப் புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?” என்றது.

காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப் புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது. வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்தால் வெற்றி பெறலாம்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger