எனது காலைப் பொழுது - சிறுவர் கதை - Tamil News எனது காலைப் பொழுது - சிறுவர் கதை - Tamil News
Headlines News :

Hottest List

Home » » எனது காலைப் பொழுது - சிறுவர் கதை

எனது காலைப் பொழுது - சிறுவர் கதை

Written By Tamil News on Saturday, February 23, 2013 | 6:41 PM


மரங்கள் அடர்ந்த அந்த மேற்கு மலைக் காட்டில், மரத்திற்கு மரம் தாவி, மரத்திலேயே குடியிருக்கும் மரநாய்க் குடும்பங்கள் பல வாழ்ந்து வந்தன. அந்தக் குடும்பங்களுக்குத் தலைவனாக அந்தச் செந்நாய் இருந்தது. மற்றக் குடும்பங்களுக்கு எந்தக் கவலையும் இல்லாமல், காப்பது அதன் கடமை.

எனினும், அந்தச் செந்நாயின் மனைவிக்கு, எந்நேரமும், மனத்தில் ஒரு கவலை அரித்துக் கொண்டேயிருந்தது. அந்தக் கவலையை மாற்ற வழியறியாமல், தவித்துக் கொண்டிருந்தது அது.

அப்படி என்னதான், அந்தச் செந்நாய்த் தாய்க்குத் தாங்க முடியாத கவலை. அது, ஒன்றும் பெரிய விசயமல்ல; அது, இதுதான். அவர்கள் பங்காளிக் குடும்பங்களில், உள்ள குட்டிகள் எல்லாம். இரவில் நேரத்தோடு தூங்கச் சென்று விடுகின்றன. காலையில் நேரத்தோடு சூரியன் உதிக்கும் முன்பாகவே எழுந்து விடுகின்றன. ஆனால், தன்னுடைய குழந்தை மட்டும், இரவில் வெகு நேரம் கழித்துத் தூங்கச் செல்கிறது. தூக்கம் வராமல் படுக்கையில் கிடந்து புரள்கிறது. காலையில் பன்னிரண்டு மணிவரை எழுந்திருக்க முடியாமல், தூங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான், அந்தச் செந்நாய்த் தாயின் தாங்க முடியாத கவலை.

மாலையில், அதை மரப்பொந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இரவில் படுக்கையில் தூங்க வைக்கவும் முடியவில்லை. பகல் முழுவதும் கொட்டாவி விட்டுக் கொண்டு, தூங்கிக் தூங்கி விழுகிறது. படுக்கையைச் சுருட்டவும் மறந்து விடுகிறது. பல் தேய்க்கவும் மறுத்து விடுகிறது. குளிப்பதே இல்லை. சோம்பேறி: முழுச்சோம்பேறி”.

நாளெல்லாம் இப்படியே புலம்பிப் புலம்பி, அலுத்து விட்டது, அந்தப் புலம்பல் தாய்க்கு.

காட்டில், எல்லோரும் உறங்கி விட்டனர். மரம் உறங்கி விட்டது. மலர் உறங்கி விட்டது. காற்றும் உறங்கி விட்டது. ஆனால், இந்தக் குட்டிக் குழந்தை மட்டும் உறங்கவில்லை. அதனால் உறங்கவும் முடியவில்லை. ‘எனக்குத் தூக்க மயக்கம். குட்டிக் குழந்தையோ, ‘எனக்குக் கதை சொல்லுஎன்று நமுக்கிறது. என்னாலும் தூங்க முடியவில்லை. ‘எனக்குத் தூக்கம் வருகிறது. தூங்கு; நாளைக்குக் கதை சொல்கிறேன்என்றால், ‘என் தலையணை மெதுவாக இல்லை; படுக்கை வசதியாக இல்லை; என்று சிணுங்குகிறது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தந்தை மரநாய் தான் படும் பாட்டை, நாளெல்லாம் சொல்லிச் சொல்லி ஓய்ந்து விட்டது.

இதோ சிங்கம் வருகிறது; அதோ, புலி வருகிறது; பிடித்துக் கொண்டு போய் விடும்! என்று சொன்னாலும், அது பயப்படுவதில்லை. இரவெல்லாம், அரட்டை அடித்து விட்டு பகலெல்லாம் தூங்கி வழிகிறது.

பெற்றோருக்கு இது பெருங்கவலையாய்ப் போய் விட்டது. தூக்கமின்மையால், உடலே வெளுத்து விட்டது. எடையும் குறைந்து விட்டது. இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்.

அந்தக் காட்டில், ஒரு சித்த மருத்துவர் இருந்தார். அவர் பார்வை பட்டாலே போதும், நோய் குணமாகி விடும். அவரை எல்லாரும் ஆந்தையார் என்றே அழைத்தனர். அவரே ஆந்தையார் தான்.

ஒருநாள், குட்டியின் பெற்றோர். குட்டியை அழைத்துக் கொண்டு, மருத்துவரிடம் சென்றனர். குட்டி படுத்தும் பாட்டையும் தாங்கள் படும் பாட்டையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சித்த மருத்துவர், குட்டியின் உடலை நன்றாகப் பரிசோதனை செய்தார். இறுதியாக அவர் சொன்னார்.

இப்படியே போனால், மரநாய்க் குட்டியின் உடல் மரத்தே போய் விடும். இதற்குத்தூங்காமைஎன்னும் நோய் தொற்றிக் கொண்டுள்ளது. இதற்கு உடனே வைத்தியம் தேவை

அதற்குத்தானே உங்களிடம் அழைத்துக் கொண்டு வந்திரு க்கிறோம். வைத்தியத்தை உடனே தொடங்குங்கள். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. இந்தக் காட்டையே விற்று. வைத்தியம் செய்யக் காத்திருக்கிறோம்.”

காட்டில் தானே, வைத்தியமே இருக்கிறது. காட்டை விற்று விட்டால் எப்படி

அப்படியா, நாங்கள் என்ன செய்ய வேண்டும், கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்”.

உங்கள் குட்டி மகன், சூரிய காந்திப் பூவைப் பார்க்க வேண்டும். பூ மலரும் போது பார்க்கவேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து பார்த்தால், இந்தக்தூங்காமைநோய், குணமாகிவிடும்”.

இது தான் வைத்தியமா

ஆமா, ஆனால், ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். சூரியன் உதயமாகும் ஒரு நாழிகைக்கு முன்பே. சூரிய காந்திப் பூ. மலரத் தொடங்கி விடும்.

சித்த வைத்தியர் சொன்னபடியே, ஒருநாள், புலர் காலைப் பொழுதில், குட்டி மகனை எழுப்பிக்கொண்டு, தாயும் தந்தையும் சூரிய காந்திப் பூ மலர்கின்ற காட்சியைக் காண்பதற்காக, ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக, காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். எங்கும் ஒரே அமைதி. காலில் மிதிபட்ட சுள்ளி விறகுகளின் முடமுடப்புச் சத்தத்தைத் தவிர, வேறு சத்தம் எங்கும் கேட்கவில்லை. இரவெல்லாம் மரங்களில் தூங்கிய பனித்துளிகள், வெண் கொடித் தோரணங்கள் போல், தொங்கிக் கொண்டிருந்தன. அவை குளிர்ந்து போயிருந்தன. குட்டிப்பையன் குளிரால் நடுங்கியபடி, முணங்கிக் கொண்டிருந்தான். எனினும் சூரிய காந்திப் பூவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், வேகமாக நடந்து கொண்டிருந்தான்.

இந்த அதிகாலைப் பொழுதில், தாங்கள் தான், முதன் முதல், அங்கே வரப் போகிறோம் என்று, எண்ணிக்கொண்டே, நடந்து கொண்டிருந்தனர். ஒரு வகையாகக் காட்டின் எல்லைக்கே வந்து விட்டனர். என்ன அதிசயம்! காட்டில் வாழ்பவர்கள் எல்லாருமே, இவர்களுக்கு முன்பே, அங்கே வந்து கூடிவிட்டனர். பறவைகளும் விலங்குகளுமாக, ஒரே கூட்டம்! அவர்கள் எல்லாரும் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள், எதையோ எதிர்பார்த்து, அமைதியாகக் காத்திருந்தனர்.

பூமியின் மேல் போர்த்தப்பட்டிருந்த இருள் போர்வையை, மெல்ல விலக்கினரோ என்னவோ, கண் இமைக்கும் நேரத்தில், செவ்விள ஒளிக்கதிர் ஒன்று, பூமியைப் பிளந்து கொண்டு, அடிவானத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிப்பட்டது. அது, மெல்ல மெல்ல விரிந்து சென்று, வானத்தைத் தொட்டு, தனது சிவந்த தூரிகையால், வானத்தில் சிவப்பு வண்ணத்தைப் பூசி, வானத்தையே சிவப்பாக்கிவிட்டது. இப்பொழுது கீழ்த்திசை வானில், சூரியன் உதித்து விட்டான். தனது செங்கதிர்க்கரத்தால், சூரிய காந்திப் பூவின் மலர் இதழ்களைத் தொட்டு விரித்தான் சூரியகாந்திப் பூ மலர்ந்து விட்டது.

செடியின் இலைகளிலும், சுற்றி உள்ள புல்வெளிகளிலும் பட்டு, சூரிய காந்திப்பூவின் பிம்பம் வெளிப்பட்டது. இரவெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த புல்லின் தலைகள், தூக்கத்திலிருந்து விழித்துச் சடசட என்ற ஒலியோடு உடலை முறுக்கிச் சோம்பல் முறித்துக் கொண்டன. அந்தக் காட்டையே, போர்த்திக் கொண்டிருந்த வெண்பனிப்படலம். சூரியனின் ஒளிபட்டதும், உருகி ஓடி மறைந்தது. வெகு தூரத்திலிருந்து குடிசையின் கூரையிலிருந்து, வெண் புகைக் கொடிகள் வானத்தில் படரத் தொடங்கின. காட்டில் பறவைகளின் தளபதி என்று யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்ற சேவல், தாவிக் குதித்து, ஒரு உயர்ந்த வேலியில் அமர்ந்தது கால் நகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டது. பெருமிதத்தால் கொண்டையைச் சிலுப்பிக்கொண்டது. சிறகுகளை அகல விரித்துக் கொண்டது. உலகமெல்லாம் கேட்க வேண்டுமென்ற எண்ணத்தில், ‘கொக்கரக்கோஎன்று உரக்கக் கூவியது.

பொழுது புலர்ந்துவிட்டது. தூக்கத்தை

விட்டுத் துள்ளி எழுங்கள் சூரிய காந்தி மலர்ந்து விட்டது.

சூரியனை வாழ்த்துவோம் வாருங்கள்

இந்தப் பெரு முழக்கத்திற்குப் பின்னணியாக காகங்கள் கரைந்தன; குயில்கள் கூவின; மயில்கள் அகவின.

இரவுப் பொழுதுக்குத் திரை விழுந்துவிட்டது. ஒளியை எதிர்க்க முடியாத இருள் அஞ்சியபடி பொந்துக்குள் நுழையும் கரும்பாம்பு போல், கடலுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. எல்லாப் பறவைகளும் மகிழ்ச்சியில் பாடத் தொடங்கி விட்டன. சமவெளியில் வெட்டுக்கிளிகள், தங்கள் அலகின் வயலினை மீட்டத் தொடங்கின. மரங்கொத்திப் பறவைகள், மரத்தில் அலகால் தட்டிப் பறை முழக்கின. எல்லாப் பறவைகளும் சேர்ந்து சேர்ந்திசை பாடின.

கொட்டிலில் அடை பட்டுக்கிடந்த பசுக்கள் வெளியில் வந்தன. கன்றுகள் பசியால்அம்மாஎன்று கத்திக் கொண்டு, கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒலிக்கத் தாயின் பால் மடியில் மோதிப் பாலருந்திக் களித்தன. ஆயர்கள் ஆடுகளைத் தொழுவத்திலிருந்து வெளியில் ஓட்டி வந்தனர். இதைப் பார்த்த நாய்கள் வழக்கம்போல் வாலை ஆட்டிக் குரைத்தன.

சூரியனுடைய வாழ்த்தால், சூரிய காந்திப்பூ மலர்ந்தவுடன், சிவப்பாகவும், மஞ்சளாகவும், நீல நிறமாகவும், கருஞ்சிவப்பு வண்ணமாகவும், மலர்ந்த மலர்களால், காடு அழகு பெற்றது. மணம் பரவியது.

குளிர்ந்த நீரோடை பாறைகளைத் தழுவி, சலசலவென ஒலி எழுப்பியது. வாருங்கள் சூரியனைப் பாடுங்கள் என்று பாடி ஓடியது.

ஆஹா! இந்தக் காலைப் பொழுது தான் எவ்வளவு ஆழகாய் இருக்கிறது செந்நாய்க் குட்டி, வியப்பில் விழித்தது.

இந்த அற்புதக் காட்சியை, ஏன் நான் இதுவரை அனுபவிக்காமல் இருந்து விட்டேன். உலகம் இவ்வளவு அழகானதா.

அழகானதுதான்; அதுவும் காலைப்பொழுது மிகவும் அழகானது. நீ தூங்கியே பொழுதைக் கழித்துவிட்டதால், உன்னால் அதை ரசிக்க முடியவில்லை.’

தாய் தன் குட்டிக்கு ஆறுதல் அளித்தது.

ஆந்தை வைத்தியர் கெட்டிக்காரர்தான். சிறந்த முறையில் சித்த வைத்தியம் செய்து குட்டியின் சித்தம் தெளியச் செய்துவிட்டார்.

அந்த நாள் முதல், அந்த மரநாய்க்குட்டி. நேரத்தோடு தூங்கச் சென்றுவிடும். அதிகாலைப் பொழுதில் எழுந்து, சூரிய காந்திப்பூ மலர்வதைப் பார்க்கச் சென்று விடும். சூரியனைப் பார்க்கும் சூரிய காந்திப் பூவைப் பார்க்கச் சென்றுவிடும். காலையின் பனிக்காற்றைச் சுவாசிக்கச் சென்றுவிடும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger