இலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்குமா? - Tamil News இலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்குமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்குமா?

இலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்குமா?

Written By Tamil News on Saturday, February 2, 2013 | 6:58 PMகொழும்பு, கண்டி முதலான பிரதான நகரங்களில் நூற்றுக் கணக்கான பிச்சைக்காரர்களை நாம் காண முடிகிறது. இவர்களுள் இளையர், முதியவர், பெண்கள், அங்கவீனர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

வறுமை, பெற்றோரை இழந்தமை, நோய்வாய்ப்பட்டமை, பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் இழந்தமை, காதலில் தோல்வி, பிள்ளைகளால் கைவிடப்பட்டமை இப்படி எத்தனையோ வகையான காரணங்களால்தான் பிச்சைக்காரர்கள் உருவாகுகிறார்கள்.


ஆனால், அநேகமானவர்கள் அங்கவீனர்கள் அல்லர். அவர்கள் உழைத்துச் சாப்பிட்டு வாழ்வாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளக்கூடிய வல்லமை படைத்தவர்கள். இருந்தும் அவர்கள் சோம்பேறித்தனத்தால் பிச்சை எடுக்கிறார்கள். வாழ்வதற்கு இலகுவான வழி பிச்சை எடுத்தல் என நினைக்கிறார்கள்.

சொந்தமாக வீடு, வாசல் இல்லாதவர்கள், தொழில் இல்லாதவர்கள், உழைக்க முடியாதவர்கள் எனப் பலர் பிச்சை எடுத்தாலும், இன்று பிச்சை எடுப்பது ஒரு தொழிலாகத்தான் போயிருக்கிறது. இதில் பிள்ளைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் இப்போது கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

பெரும்பாலனவர்கள் தம்பதியாகத் தோன்றி பிள்ளைக்கு மயக்க மருந்து கொடுத்து பரிதாபகரமாகக் காண்பித்து பேருந்துகளிலும் ரயில் பெட்டிகளிலும் யாசகம் புரிகின்றனர். இதில் உண்மையானவர்கள் ஒருபுறமிருந்தாலும், பெரும்பாலும் போலிகள் காணப்படுவதாகவே கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால், இனிமேல் சிறுவர்களுடன் பிச்சை எடுப்பதைத் தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதேநேரம் கடந்த முதலாந் திகதியிலிருந்து தனியார் பஸ்களில் பிச்சையெடுப்பது தடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பிச்சை எடுப்பதைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைப் புனர்வாழ்வளித்து அவர்களுக்குப் புதிய வாழ்வியலைத் தோற்றுவித்துக்கொடுக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. எனினும், கடந்த பல வருடங்களாப் பிச்சைக் காரர்களுக்கென அமைக்கப்பட்ட நலன்புரி முகாம்களிலிருந்து பிச்சைக்காரர்கள் தப்பிச்சென்றிருப்பதே உண்மை. பிச்சைக்காரர்கள் 90 வீதமானவர்கள் சமூகத்தில் உதவிகளை எதிர்பார்க்கவில்லையென்றும் அவர்களில் அநேகமானோர் பிச்சைக்காரர்களாக இருக்கவே விரும்புகிறார்கள் என்றும் கருத்துக் கணிப்புகளிலிருந்து தெரியவந்திருக்கிறது. 50 வீதமானவர்கள் வீடோ காணியோ பெறுவதை எதிர்க்கிறார்கள். 84 வீதமானவர்கள் தொழிலொன்று பெற்றுக்கொடுப்பதை விரும்பவில்லை!

பிச்சை எடுக்கும் மொத்த தொகையினருள் 21 வீதத்தினர் மட்டுமே அங்கவீனர்கள் - மாற்றுத்திறனாளிகள் அதிலும் 72 வீதமானவர்கள் ஆண்களென்றும் 28 வீதமானவர்கள் பெண்களென்றும் 10 வீதமானவர் சிறுவர்களென்பதும் அதில் 20 வீதமானவர்கள் பராயமடைந்தவர்களென்றும் கணிப்பீடுகள் கூறுகின்றன. 60 வீதமானவர்கள் பகல் வேளையில் பிச்சை எடுக்கும் அதேவேளை 37 வீதமானவர்கள் இரவில் பிச்சை எடுக்கிறார்கள். 3 வீதமானவர்களுக்கு உகந்த நேரமென்று கிடையாது. இவர்கள் அனைவரும் குறித்த பிரதேசத்திற்கு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்திருக்கிறது

இலங்கையில் பிச்சைக்காரர்களைப் பற்றி பேராசிரியர் நந்தசேன ரத்னபால முழுமையாக ஆய்வு செய்து நூலொன்றை எழுதியிருக்கிறார். பிச்சைக்காரர்களோடு பிச்சைக்காரராக வாழ்ந்து ஆழமாக ஆய்ந்து எழுதப்பட்ட நூலில் பிச்சைக்காரர்களின் முழுச் சரிதமே அடங்கியிருக்கிறது. உலகிலேயே பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு இஸ்ரேல் என்று சொல்லிக்கொள்ளலாம் என்கிறார்கள் சர்வதேச நோக்கர்கள். அவ்வாறான ஒரு நிலை ஆசிய நாடுகளில் ஏற்படுவதற்கு எத்தனை யுகம் எடுக்குமோ தெரியவில்லை. ஏனெனில் ஒரு தொழில் செய்து பிழைப்பதைவிட பிச்சை எடுப்பதில் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதே பிச்சைக்காரர்களின் கணிப்பு!

நம் நாட்டில் அவ்வப்போது கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணை செய்து பார்த்தால் பலர் இலட்சாதிபதியாக இருப்பதுடன் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

அண்மையில் றாகமை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியிலிருந்து கைது செய்யப்பட்ட 18 பிச்சைக்காரர்களுள் ஒருவரின் வங்கிக் கணக்கில் 20 இலட்சம் ரூபாய் வரவு காணப்பட்டதுடன் அவர் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் ஒரு வானுக்கும் சொந்தக்காரர் என்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. முச்சக்கரவண்டிகளை வாடகைக்குக் கொடுத்துள்ள அவர் பிச்சை எடுப்பதன் மூலம் இரண்டு மணித்தியாலத்தில் நான்காயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவதாக ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருணாகல் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் நீண்ட காலமாக இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகிறார். தனது வானில் றாகமைக்குச் சென்று பிச்சைத் தொழிலைப் புரியும் அவர், மாலையில் தூய ஆடை அணிந்து ஆசுவாசமாகிவிடுவார். என்கிறார்கள் அயலவர்கள்.

எவ்வாறெனினும் பிச்சை எடுத்தலை தொழிலாகக் கொண்டிருப்போர் பற்றிய கணக்கெடுப்பு இன்னமும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

விசு கருணாநிதி....-
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger