மழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்! - Tamil News மழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்! - Tamil News
Headlines News :

Hottest List

Home » » மழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்!

மழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்!

Written By Tamil News on Saturday, February 2, 2013 | 4:39 PMஇயற்கையின் சக்திக்கும் மனிதன் கண்டுபிடித்த அறிவியல் சக்திக்குமிடையிலான பலப்பரீட்சையில் இயற்கைதான் வென்று கொண்டிருக்கின்றது. மனிதனால் வெல்ல முடியாதது எதுவுமில்லை. அவனுக்கு எல்லா சக்தியும் உண்டு என்றாலும் அஃதவ்வாறல்ல என்பதை நிரூபிக்க அடிக்கடி சீறிப்பாய்ந்தே வருகின்றது.

 இயற்கையின் சீற்றத்தை முன்கூட்டியே அறியும் வல்லமையை மனிதன் தன் அறிவியல் சக்தியைக் கொண்டு ஓரளவு கணித்துக்கொண்டாலும் அதன் சீற்றத்தை மனிதனால் தடுக்க முடிவதே இல்லை.

எதிர்பாராத கணத்தில் ஏற்படும் இயற்கையின் சினத்தால் இலங்கையின் பல பகுதிகள் அழிவைச் சந்தித்திருக்கின்றன. சுனாமி பேரழிவு, வெள்ள அனர்த்தம், மூடுபனி, பூமி அதிர்ச்சி, மண் சரிவு இவ்வாறான இயற்கை அனர்த்தங்களால் மனித வாழ்வில் அவலங்கள் ஏற்படுகின்றன. ஏழை-பணக்காரன், ஆண்டான் - அடிமை, வெள்ளைக்காரன் - கறுப்பன், உடையவன் - இல்லாதவன் என்ற பேதங்களை இயற்கை ஒருபோதும் பார்ப்பதில்லை.
 
நமது நாட்டிலும் அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதால் மக்களின் வாழ்வு பெருமளவில் சீரழிந்து வருகின்றது. சுனாமி பேரழிவு நமது சின்னஞ்சிறிய நாட்டை உருக்குலைத்தது. அந்த அழிவிலிருந்து நாம் மீண்டெழுவதற்கிடையில் அடிக்கடி இயற்கை நம்மை சீண்டிப் பார்க்கின்றது.

அந்த வகையில் கிழக்கிலும் மலையகத்திலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மக்களின் இயல்பு வாழ்வ்வைப் பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்வை மாத்திரமின்றி அவர்களின் பொருளாதாரத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்த பெரும் மழை காரணமாகவும் வெள்ளப்பெருக்கினாலும் மக்களின் சீரான வாழ்வு சீரழிந்துள்ளது. தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில் தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். பாடசாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடைமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளிலும் பாடசாலைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள் பொது இடங்களில் தஞ்சமடைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களின் தாழ்நிலப்பகுதிகள் அனைத்தும் வெள்ளநீர் நிரம்பி வடிகின்றது. மக்களின் வாழ்விடங்கள் நீரில் மூழ்கிக்காணப்படுகின்றன. மட்டக்களப்பில் சில இடங்களில் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ள நீரால் நிரம்பியுள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் துன்பப்படுகின்றனர். அந்த மாவட்டத்தின் தற்போதைய காலநிலை சுமுக வாழ்வுக்கு உகந்ததாக இல்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர். சிறுவர்களும் முதியோர்களும் தாங்கொணாத வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை, தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனைப்பற்று, காத்தான்குடி, செங்கலடி, ஏறாவூர், கிரான், வாழைச்சேனை, வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ் நிலங்கள் அனைத்தும் வெள்ளத்தினால் நிரம்பிக் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பெரும்பாலான கிராம வீதிகள் அனைத்தும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாவட்டங்களிலுள்ள குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் அனைத்தும் மழை நீரினால் நிரம்பி காணப்படுகின்றது. நீர் வழிந்தோடுவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய குளங்களான நவகிரி, உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்கள் நிரம்பி வழிவதால் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

தாழ்நிலப்பகுதிகளில் மழைநீரும் குளநீரும் சேர்ந்து வெள்ளம் கரை புரண்டோடுகின்றது. வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ராணமடு மற்றும் வேத்துச்சேனை கிராமங்கள் துண்டிக்கப்பட்டதனால் அந்த மக்களை மீட்கும் பணிகளை இடர்முகாமைத்துவ அதிகாரிகள் மேற்கொண்டனர்.

கிழக்கு வாழ் மக்களின் முக்கிய பொருளாதார வருமானத்தை ஈட்டித்தரும் நெல்வேளாண்மை இந்த அடைமழையினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது துரதிஷ்டமே. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்என்ற நம்பிக்கையில் வேளாண்மையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தமது வயல் நிலங்கள் அழிந்து போனதால் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இத்தகைய அனர்த்த சூழ்நிலைகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேற்கொண்டு வருகின்றது. அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், செயலகப் பணியாளர்கள், கிராமசேவை அதிகாரிகள், தொண்டர் நிறுவனங்கள் என இன்னோரன்னோர் இரவு பகலாக சேவையில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய வாழ்வாதார உதவிகளை நல்கி வருகின்றனர். வெள்ளம் வடிந்தோட வாய்க்கால்கள் வெட்டப்பட்டு வருகின்றன. வெள்ள அகதிகளை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல இராணுவத்தினர் ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்கப்படாதவை. இத்தகைய நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற அனர்த்த முகாமைத்துவ நிலையம் அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகின்றது.

இத்தகைய உடனடி நிவாரணப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தபோதும் அவற்றைக் கொச்சைப்படுத்தி அரசின் மீது சேறுபூசும் தீய நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபடத்தான் செய்கின்றனர். வழமையாக அரசை எதிர்த்து குரல் எழுப்பும் தீயசக்திகள் விஷயத்தை அரசியல் மயப்படுத்தி அரச நிவாரணப்பணிகளை மலினப்படுத்தினர். சில இடங்களில் அரசு எந்த உதவியுமே வழங்கவில்லையென அப்பட்டமான பொய் கூறி அரசின் மீது சேறு பூசி வருகின்றனர். அரச நிவாரணம் இல்லை எனக் கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் கதைதான் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டு முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தொடர்ந்தும் சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக அகதிகள் தெரிவிக்கின்றனர். நிவாரணப் பணிக்காக தேவையான நிதியை வேண்டியளவு பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம், மாவட்டச் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.

இது இவ்விதமிருக்க மழையின் அகோரம் மலைநாட்டையும் விட்டுவைக்கவில்லை. லிந்துலை, மொரயா, ஊவாக்கலை தோட்டத் தொழிற்சாலைப் பிரிவில் லயன் குடியிருப்புக்களுக்கு அண்மித்த பகுதிகளில் பாரிய கற்பாறைகள் எந்நேரத்திலும் உருண்டு விழும் அபாயம் உள்ளதால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

கற்பாறைகளின் அடியில் மண்ணரிப்பு ஏற்பட்டு வருவதால் எந்நேரமும் தமக்கு உயிராபத்து ஏற்படுமென மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் லிப்பக்கலை எல்ஜின் தோட்டப்பிரிவில் எந்நேரமும் கற்பாறையொன்று உருண்டு விழும் அபாயம் உள்ளதால் மக்கள் இது தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்க முடிந்தளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசரத் தேவையாகும்.

சுஐப் எம்.காசிம்....-
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger