கலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் காரணமா? - Tamil News கலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் காரணமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » , , » கலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் காரணமா?

கலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் காரணமா?

Written By Tamil News on Saturday, February 2, 2013 | 4:47 PMயாழ். குடாநாட்டில் தலைதூக்கியுள்ளபியர்கான்கலாசாரம் குடாநாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

யாழ்ப்பாண குடாநாட்டின் அனேகமான உள்ளக வீதிகளில் தினமும் சிதறிக்கிடக்கும் வெற்றுபியர் கான்கள்குடாநாட்டு இளைய தலைமுறையின் சமூக எழுச்சியில் பாரிய சறுக்கல் படிகளாகவே உள்ளன.

யாழ்ப்பாணம் என்பது தமிழர்களின் கலை, கலாசார, வாழ்வியலின் அடையாளச் சின்னம்.

வாளெடுத்து போர் தொடுத்து தமிழர் வாழ்வியலை காத்துநின்ற மன்னவர்கள் வாழ்ந்த பூமி. கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்த யுத்தம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் ஏராளமான வடுக்களென தாங்கி நிற்கும் மண் யாழ். மண்.

யுத்தம் இன்று நிறைவடைந்துவிட்டது. நிலைமை படிப்படியே வழமைக்கு திரும்பத் தொடங்கிவிட்டது. யுத்தத்தால் சீர்கெட்டு சரிந்து போயிருக்கும் கலாசார விழுமியங்களையும், பண்பாடுகளையும் மீள தூக்கிநிறுத்தும் பொறுப்பு இளைய சமுதாயத்தின் கைகளிலேயே உள்ளது.

ஆனால் இன்றைய யாழ். இளைய சமுதாயம் அதில் ஆர்வம் காட்டாது. தாங்களும் தமது பங்கிற்கு கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை சீரழிப்பதில் ஈடுபடுவது, அல்லது சீரழிவுகளை கண்டும் காணாதும் இருப்பது எதிர்காலத்தில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும்.

யாழ். குடாநாட்டுக்கென சிறப்பான கலை, கலாசார, விழுமியங்கள் உள்ளன. இவற்றை கண்டுகளிக்கத்தான் ஏராளமான பிற தேசத்தவர்கள் யாழ். குடாநாட்டை நோக்கி படையெடுக்கின்றனர். நிலைமை இவ்வாறிருக்க யாழ். குடாநாட்டவர்கள் குறிப்பாக இளைஞர்கள் தமது பண்பாடுகளை வளர்க்கவும் பாதுகாக்கவும் தவறி நிற்கின்றமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.

யாழ். குடாநாட்டின் இன்றைய இளம் சமுதாயத்தில் ஒரு பகுதி மதுப் பாவனை பழக்கத்தின் பிடியில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக் கொண்டுள்ளது.

இங்கு அநேக இளைஞர்கள் பியர் பருகுவதை ஒரு ஸ்ரையிலாகவே பார்க்கின்றனர். இவர்களுக்கு களம் அமைத்து கொடுத்திருப்பது பியர்கான்களாகும்.

ஒருவர் மது அருந்த வேண்டும் என்றால் மதுபான கடைக்கு செல்லவேண்டும். அங்கு இருக்கையில் அமர்ந்து பிரதான மதுசாரத்தை வாங்கி ஒரு குவளையில் ஊற்றிப் பருகவேண்டும். இதன்போது குவளையையோ மது போத்தலையோ கவனமாக கையாண்டு பொறுமையாக மது அருந்தவேண்டும்.

இவ்வாறு மது அருந்த செல்பவர் வீட்டாருக்கோ உறவினர்களுக்கோ தெரியாமல் மது அருந்துவது என்பது கடினம். மதுக்கடை இருக்கும் பிரதேசத்தில் நடமாடினாலே கதை ஆளுக்குமுன் வீட்டுக்கு போய்விடும். அதன்பிறகு வீட்டில் கடுமையான கண்டிப்பு கிடைக்கும். உறவினர்கள் காணும் போதெல்லாம்என்ன அந்தப்பக்கம் திரியுaங்கள்......”? என கேள்வி எழுப்புவர். ஆனால் இந்தச் சிக்கலை பியர் கான்கள் ஒரேயடியாக தீர்த்துவிட்டன.

காற்சட்டைப் பைக்குள்ளேயே வைக்கக்கூடிய அளவு, இலகுவில் உடைந்துவிடாதளவு தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மதுசாரம், கலந்து பருக சோடாவோ வேறு எதுவுமோ தேவையில்லை, எங்கு வேண்டும் என்றாலும் இலகுவில் எடுத்துச் சென்று பருகலாம், முக்கியமான மதுக்கடைக்குள் இருந்து பருக வேண்டியதில்லை, எடுத்துச் சென்று எங்கு வேண்டும் என்றாலும் வைத்து பருக முடியும். பெரிதாக நாற்றமடித்துவிடாது. இப்படி ஏகப்பட்ட வசதி வாய்ப்புகளை உள்ளடக்கியதாக இந்த பியர்கான்கள் அமைந்திருப்பதால் இளைஞர் சமூகம் இதனை விரும்பிப் பாவிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் அநேகமான யாழ். குடாநாட்டு இளைஞர்கள் பியர்கான்களை பயன்படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. இது பார்ப்பதற்கு கேட்பதற்கு ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இதன் விளைவுகள் மிகப் பெரிதாகவே காணப்படுகின்றன.

யாழ். குடாநாட்டில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை படிப்பை முடித்தவர்கள் என ஏராளமானோர் இந்தபியர்கான்கலாசாரத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் வீதிகள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், என இளைஞர் குழுக்கள் கூடும் அநேக பிரதேசங்கள் மற்றும் உள்ளக வீதிகள், ஒழுங்கைகள், மரத்தடி நிழல் உள்ள இடங்கள் என அநேக இடங்களில் பியர் கான்களை கையில் ஏந்திநிற்கும் இளையோரை காண முடிகிறது. தினமும் மாலை மற்றும் இரவு வேளைகளில் இப்படியான இடங்களில் கூடும் இளைஞர்கள் பியர்கான்களுடன் தமது பொழுதை களிப்பதுடன் மற்றவர்களுக்கு இடையூறாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு மதுவுக்கு அடிமையான சில இளைஞர்கள் தன் நிலை மறந்து பெண்கள், சிறுமியர்கள் மீது அங்கசேஷ்டை புரிதல், திருட்டுக்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற சம்பவங்களும் நிகழ்கின்றன.

யாழ். குடாநாட்டில் வெளியாகும் பத்திரிகைகளில் இவ்வாறான சம்பவங்கள் குறித்த பல செய்திகளை தினமும் பார்க்க முடிகிறது. குடாநாட்டில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் விபத்துக்களில் பெரும்பாலானவை மதுப்பாவனையின் பின் அதாவது போதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படுகின்றன என பொலிஸார் கூறுகின்றனர்.

யாழ். குடாநாடு சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோக, வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்த பூமியாகியுள்ளது.

வரலாற்றில் என்றுமில்லாதளவு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் கூட சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட கொடிய சம்பவம் தீவகத்தில் நிகழ்ந்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். “குடிகார பயல்களால் மாணவியர் பாடசாலை சென்று வீடுதிரும்ப முடியாதுள்ளதுஎன பெற்றோர்கள் பலர் புழுங்குகின்றனர்.

சிறுவர், சிறுமியரை சுதந்திரமாக வீட்டுக்கு வெளியில் சென்று விளையாடவிட முடியவில்லை. வீட்டினுள் இருக்கும் இளசுகள், பழசுகளையும் நம்ப முடியவில்லை என்ற நிலையில் குடாநாட்டு சமுதாயம் அஞ்சிக் கலங்கி நிற்கிறது. இவ்வளவு காலமும் இல்லாத இந்த கொடூர சூழல் இப்பொழுது எங்கிருந்து வந்தது என்பது எல்லோருடைய கேள்வியுமாகும்.

முன்னர் ஒரு காலம் இருந்தது மாலை வேளையில் விளையாட்டு திடல்களில் திரள்வர் இளையோர்.

அவர்கள் கூடிவிளையாடி குதூகலிக்கும் அழகை காண மரக்குற்றிகளிலும், மதில்களிலும் குந்தியிருந்து நாட்டு நடப்பை பேசுவர் பெரியோர்.

ஆனால் இன்று அப்படியல்ல, அதிக மைதானங்களில் விளையாட்டுக்களை விட இளைஞர் குழு மோதல்கள்தான் நிகழ்கின்றன. கல்வியையும் கலாசாரத்தையும் பண்பாடுகளையும் வளர்க்க வேண்டிய சனசமூக நிலையங்கள் பலவற்றில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் இளைஞர்கள் கூடுவது மது அருந்துவதற்காக என்ற நிலை உள்ளது.

அநேகமான சனசமூக நிலையங்களை அண்டிய பகுதிகளில் வெற்று பியர் கான்களே பரவிக் கிடக்கின்றன. வீதியோர புதர்களுக்குள்ளும் இவையே கிடக்கின்றன.

ஊரின் வெளிச்சத்துக்காகவும் குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும் வீதியோரங்கள் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள பொது மின் விளக்குகளை பதுங்கியிருந்து பியர் அடிக்க வேண்டும் என்பதற்காக கல் வீசி உடைத்தெறியும் விசமிகள் கூட உள்ளனர்.

நிலைமை இப்படி இருக்கும்போது வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் வன்முறைகளை தடுப்பது எப்படி? சிறுவர்கள் பெண்கள் நிம்மதியாக இருப்பது எப்படி?

பியர்கான்கலாசாரம் சிறு வயதிலேயே அதாவது உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாத வயதிலேயே ஒரு சிறுவனை குடிகாரனாக்கிவருவதால் சமூகத்தின் இதன் விளைவு படுமோசமானதாக இருக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கைகளிலேயே இருக்க சில இளைஞர்கள் பியர் கான்களுடன் வீதியில் நின்று சமூகத்தை சீரழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குடும்பத்துக்கோ, சமூகத்துக்கோ தெரியாமல் ஒரு இளைஞ னையோ அல்லது சிறுவனையோ குடிகாரனா க்கி, சமூகத்தின் பாதுகாப்பையும் அவனால் கட்டிக்காத்து வளர்க்கப்பட வேண்டிய கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் நாசமாக்கும்பியர்கான்குறித்து விழிப்பாக இருக்க வேண்டியது யாழ். குடாநாட்டு குடும்பங்களின் சமுதாயத்தின் பொறுப்பாகியுள்ளது.

. பவன்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger