கலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் SLMC தலைவர் ரவுப் ஹக்கிம் ஆற்றிய உரைத்தொகுப்பு - Tamil News கலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் SLMC தலைவர் ரவுப் ஹக்கிம் ஆற்றிய உரைத்தொகுப்பு - Tamil News
Headlines News :

Hottest List

Home » » கலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் SLMC தலைவர் ரவுப் ஹக்கிம் ஆற்றிய உரைத்தொகுப்பு

கலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் SLMC தலைவர் ரவுப் ஹக்கிம் ஆற்றிய உரைத்தொகுப்பு

Written By Tamil News on Thursday, January 3, 2013 | 3:15 PM


தொகுப்புஅஸ்ரப் சமத்

முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் நீதி அமைச்சராக இருக்கின்றபடியால் சட்டக் கல்லூரிக்கு நுழைவுப் பரீட்சியில் திறமையடிப்படையில் சித்தியெய்திய முஸ்லீம் மாணவர்கள் கணிசமானஅளவு அதிகரிக்கப்பட்டமையால்  அந்தப் பிரச்சினையும் எனது தலையில் கொண்டுவருகின்றனர்.

ஜனவரி 08ஆம் திகதி நடைபெறுகின்ற பாராளுமன்ற அமர்வின்போது இது பற்றிய விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளேன். 1915ஆம் ஆண்டு வர்த்தகத்தை மையமாகக் கொண்டு  கம்பளையில் சிங்கள முஸ்லீம் கலகம் தூண்டப்பட்டது. அதே போன்று இன்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டே கலகத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர்இந்த தீய நோக்கம் ஹலால் சான்றிதழ் மற்றும் சட்டக் கலலூரி நுழைவுப் பரீட்சை போன்ற பல கோணங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. வர்த்தகப் பிண்னனியில் இந்த சர்ச்சை ஏற்படுத்தப்படுகின்றனது.

பெரும்பாண்மை சமுக்த்தில் உள்ள சிறிய ஓரு குழுவினரே இன்று இலங்கை வாழ் முஸ்லீம்களக்கு எதிராக செயற்படுகின்றனர். இவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் இனவாத முலாம் பூசுகின்றனர்.

அதே போன்றே 30 வருட கால யுத்தம் நிறைவடைந்த பின்னரான இன்றும் முஸ்லீம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்அன்று பிரித்தானியாவிலிருந்து இலங்கை சுதந்திரமடைந்தபோது  முஸ்லீம்கள் பல பிரச்சினைகளை  எதிர்நோக்கினர். சமகாலத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அச்சமின்றி அந்த சர்ச்சைகளின் அடிப்படைகளை தெளிவுபடுத்த வேண்டும் என நீதியமைசச்ரும் முஸ்லீம் காங்கிசின் தலைவருமான ரவுப் ஹக்கீம்  தெரிவித்தார்.

இப் பிரச்சினைகளுக்கு நான் தனியாக மேற்கொள்ளாமல் பாராளுமன்றத்தில் உள்ள சகல முஸ்லீம் உறுப்பினர்களும் சேர்ந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய யுகத்துக்குள் பிரவேசிக்கின்ற முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு  சரியான திக்கை காட்டுகின்ற சவாலுக்கு கலாநிதி ரி.பி. ஜாயா முகம் கொடுத்தது போன்று இன்றைய சூழ்நிலையிலும் சவால்களை எதிர்கொள்கிறோம்.

இவ்வாறு மறைந்த தலைவர் கலாநிதி ரி.பி. ஜாயா நினைவுச் சொற்பொழிவை செவ்வாய்க்கிழமை (02) மாலை கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்வி மன்றத்தில் நிகழ்த்திய போது நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கலாநிதி ரி.பி. ஜாயா பவுண்டேஷனால் இந்த நினைவுச் சொற்பொழிவு வழமை போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நினைவுச் சொற்பொழிவில் அவர் மேலும் தெரிவித்தவையாவன,

மறைந்த தலைவர் கலாநிதி ரி.பி. ஜாயா நினைவுச் சொற்பொழிவை ஆங்கிலத்தில் நிகழ்த்துவதற்கு நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். மர்ஹூம் ஜாயா அவர்கள் தீட்சண்யமான பார்வையுள்ள ஒரு கல்விமானாக மட்டுமல்லர், தேசிய வீரராகவும், மானுடவாதியாகவும், அமைச்சராகவும், இராஜதந்திரியாகவும் திகழ்ந்திருக்கிறார்.

கலாநிதி புர்ஹானுதீன் ஜாயா என்ற ஆளுமை அரசியல் திறமைகளுக்கு அப்பால், இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அவர்களது தனித்துவ அடையாளங்களுக்கு அளித்திருக்கின்ற அந்தஸ்த்து என்பது மிகத் தெளிவாக நாங்கள் எல்லோரும் உணர வேண்டிய விடயமாகும்.

மூன்று நூற்றாண்டு கால ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆட்சிகளின் முடிவில் சுதந்திர இலங்கையின் அரசியல் அமைப்பில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் ஓரளவு உள்வாங்கப்படுவதற்கு அவர் காரணகர்த்தராக இருந்திருக்கிறார். அவர் கொழும்பு சாஹிரா கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய காலம் அதன் பொற்காலமாக விளங்கியது. பின்னர் கலாநிதி .எம்.. அஸீஸ் அதிபராக இருந்த காலமும் சாஹிரா கல்லூரியின் வரலாற்றில் சிறப்பானது.

கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான தலைசிறந்த ஊடகவியலாளர் டி.பி. தனபால கலாநிதி ஜாயாவின் சிறப்பு அம்சங்களை மிகவும் சிலாகித்துக் கூறியுள்ளார்.

கலாநிதி ஜாயா பிறந்த மத்திய மலைநாட்டின் அதே கலகெதர என்ற ஊரைச் சேர்ந்தவன் என்பது மட்டும் தான் எனக்கும் அவருக்கும் இடையில் உள்ள ஒற்றுமையாகும். மலாய் முஸ்லிமான அவர் இந்த சமூகத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய கால கட்டத்தில் ஒரு புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் சவாலை அவர் எதிர்நோக்கினார். அதாவது ஒரு யுகத்துக்குள் பிரவேசிக்கின்ற சமூகத்துக்கு சரியான திக்கை காட்டுகின்ற சவாலுக்கு அவர் முகம் கொடுத்தார். அந்த புதிய யுகத்தின் அறை கூவல் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையின் முஸ்லிம் சமூகத்திற்கான தலைமை என்ற சவாலாகும்.

நானும் என்னைப்போன்ற சமகால முஸ்லிம் தலைவர்கள் எதிர்நோக்கியிருப்பது அதைவிடவும் வித்தியாசமான சவாலாகும். சுதந்திர இலங்கையில் 30 ஆண்டுகாலமாக நீடித்த ஒரு உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தபின்னர் ஆயுதக் கலாசாரத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்திற்கு எத்தனித்த தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னணியில் இந்த சமூகத்தை இட்டுச் செல்கின்ற பாரிய சவாலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றைப் பற்றி இங்கு நீண்ட ஆய்வை மேற்கொள்ள அவகாசம் இல்லை.

நாங்கள் இல்லாத காலத்தில் எங்களைப் பற்றி யாராவது ஆய்வு செய்வதானால் அதுபற்றி கவனம் செலுத்தப்படக் கூடும் என்று எண்ணுகின்றேன். இன்று நாங்கள் எதிர்நோக்கியுள்ள சவாலைப் பார்க்கும் போது, கலாநிதி ஜாயாவின் காலத்திற்கும் இன்றைக்கும் பொருந்துகின்ற ஒரேயொரு விடயத்தை தொட்டுப் பேசலாம் என நினைக்கிறேன்.

இப்பொழுது ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அது ஹலால் சான்றுப்பத்திரத்தோடு மற்றும் நின்றுவிடும் சர்ச்சையல்ல. இப்பொழுது சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்விலும் அது வந்து மூக்கை நுழைத்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் இன்றைய தலைமைகள் இந்த முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்திச் செல்வதில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு முக்கிய திருப்பு முனையாக இதனைக் காணலாம்.

இதை எதிர்கொள்வதில் கலாநிதி ஜாயாவின் அணுகு முறையில் எங்களுக்கு நிறைய படிப்பினைகள் உள்ளன. அச்சமின்றி பீதியின்றி எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது.

இந் நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகப் பெரும்பாலானோர் நாட்டின் பல்லினத் தன்மையை அங்கீகரித்து அரவணைப்பவர்கள். ஆனால் ஒரு மிகச் சிறிய குழுவினர் மேற்கொள்ள விழைகின்ற ஒரு விடயம் எல்லோரையும் ஒரு காட்டாற்று வெள்ளம் போல அள்ளிக்கொண்டு சென்று விடலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

இதில் அன்றிலிருந்து இன்றுவரை உள்ள ஓர் ஒற்றுமை என்னவென்றால் ஏதாவதொரு கலகத்திற்கு வழிகோலலாம் என்பது அத்தகையவர்களது எதிர்பார்ப்பாகும். கலகம் என்று நோக்கினால் 1915 ஆம் ஆண்டை மறந்து விட முடியாது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அதன் நூற்றாண்டை நாம் சந்திக்க இருக்கிறோம். ஒரு நூற்றாண்டின் பின்னால் அதனை திரும்பிப் பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்க்கப் போகின்றது. இந்தக் கட்டத்தில் அன்றிருந்தது போன்று தான் இன்றும் என்பதை புரிந்துகொள்கிறோம். இதில் வர்த்தக நோக்கத்தை முக்கியமாக காண்கிறோம்.

அன்று கம்பளையில் ஆரம்பித்த அக் கலவரத்தின் அடிப்படையில் இன்று ஹலால் சான்றிதழ் அல்லது சட்டக் கல்லூரி நுழைவு என்ற அர்த்தமில்லாத அடிப்படையில்லாத காரணங்களை வைத்து செய்ய முயற்சிக்கப்படுகின்ற இதன் பின்னணியில் இருக்கின்ற முக்கியமான ஒரு விஷயம் வர்த்தகஇ வாணிப போட்டியாகும். அதாவது முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தில் கைவைக்கும் எத்தனமாகும்.

எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற போது நான் ஒரு விளக்கத்தை அளிப்பதற்காக இப்பொழுது உரிய தகவல்களை திரட்டிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் இந்த சட்டக் கல்லூரி நுழைவு பிரச்சினையின் சரியான பின்னணி என்ன என்பதை தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். அங்கும் வர்த்தப் போட்டிதான். அது எவ்வாறு என்று கேட்பீர்கள்? அதனை 8 ஆம் திகதி பார்க்கலாம்.

அதாவது சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையே இப்பொழுது வர்த்தக மயமாகிவிட்டது. ஒரு போட்டியாகிவிட்டது. கல்வி நிலையங்களை நடத்துவதே போட்டியாகிவிட்டது. விபரீதமான குழுக்கள் கைக்கு கிடைக்கும் எந்த விஷயத்தையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு அதற்கு இனவாத முலாம் பூசி வரும் ஒரு விதமான துரதிர்ஷ்ட்ட வசமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே இவற்றுக்கு நாங்கள் நீண்ட விளக்கங்கள் நாம் ஏட்டிக்குப் போட்டியாக கொடுக்க முயல்வது அவ்வளவு உசிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கமாட்டாது. இதனை கூட்டாக பொறுப்புணர்ச்சியோடு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதைப் பற்றித்தான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கதைத்து வருகிறோம்.

இது தனி ஒருவரின் பொறுப்பு அல்ல. சட்டக் கல்லூரி நுழைவு பிரச்சினைக்கு நீதியமைச்சர் என்ற முறையில் எனக்கு விளக்கமளிக்க முடியும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற கோதாவில் விளக்க முற்பட்டால் தான் பிரச்சினை தலைதூக்குகின்றது. சந்தர்ப்பவசமாக நான் நீதியமைச்சராக இருக்கிறேன் என்பதை தவிர வேறெந்தக் காரணமும் இல்லை.

இதை மிகத் தெளிவாக நாங்கள் அடையாளம் கண்டுகொண்டு இனவாத சக்திகளை பெரும்பான்மை சமூகத்தில் நியாயமாகச் சிந்திக்கின்ற அதிகப் பெரும்பாலானோரோடு சேர்ந்து கொண்டு முகம் கொடுக்கத் தயாராகுவது தான் முக்கியமானது. அதனைத் தான் மர்ஹூம் கலாநிதி ரி.பி.ஜாயா செய்தார். அதில் அவர் வெற்றி கண்டார்.

குணபால மலலசேகர என்ற இந் நாட்டின் சிங்கள எழுச்சிக்கு வித்திட்ட தலைவர் கலாநிதி ரி.பி. ஜாயா, சீ. சுந்தரலிங்கம் போன்றவர்கள் கொழும்பு ஆனந்த கல்லூரியில் சமகாலத்தில் ஆசிரியர்களாக பணி புரிந்தவர்கள். அந்த மூவரினதும் பங்களிப்பும் அப்பொழுது ஆனந்தா கல்லூரியின் வளர்ச்சிக்கு உந்துகோலாக இருந்தது. பௌத்த சிங்களவர் ஒருவர் மட்டுமல்ல தமிழரும் முஸ்லிம்களும் அதற்கு பங்களித்திருக்கிறார்கள் என்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.

ஆனால் அன்றிருந்த காலத்தின் தேவையைக் கருதி அவர்கள் ஒவ்வொருவராக தங்களது கடமையை அவரவர் சார்ந்த சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடப்பாடு இருந்தது. தனித்தனி சமூகத்தினராக தங்களது இனத்துவ அடையாளத்தை சரிவர பேணிக்கொண்டு இலங்கை என்ற இந்த தேசியத்தை கட்டி எழுப்புகின்ற உன்னதமான கைங்கரியத்தை அந்தத் தலைவர்கள் மேற்கொண்டனர்.

தங்களது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமலும் இழந்துவிடாமலும் தங்கள் தர்க்கங்களை மிகவும் சாதுரியமாகவும் சாணக்கியமாகவும் அவர்கள் முன்வைத்தார்கள்.

அதனை அடியொட்டி நாங்கள் முன்னேறிச் செல்வோமாக.

இவ்வாறு தமது நினைவுச் சொற்பொழிவில் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

புனித மக்காவில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கை காரி ஹாபிஸ் ரிப்தி முஹம்மது ரிப்கானும்இ மறைந்த கலாநிதி ரி.பி. ஜாயா கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபராக பதவி வகித்த காலத்தில் அவரது மாணவர்களாக இருந்த சிலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் .எச்.எம். அஸ்வரும் உரையாற்றினார்.

ரி.பி. ஜாயா பவுண்டேஷன் தலைவர் எம்.அஷ்ரப் ஹூஸைன் வரவேற்புரையையும் செயலாளர் நாயகம் எம். பைஸல் பளீல் நன்றி உரையையும் நிகழ்த்தினர்டி.பி.ஜாயா பற்றிய நூலின்  முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் அமைச்சர் றவுப் ஹக்கீமிடமிருந்து பெற்றுக்கொண்டார். கலைக்கமல் மற்றும் சமுக சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger