கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கும் தீங்கு ஏற்படாது- விஞ்ஞானி அபுல்கலாம் - Tamil News கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கும் தீங்கு ஏற்படாது- விஞ்ஞானி அபுல்கலாம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கும் தீங்கு ஏற்படாது- விஞ்ஞானி அபுல்கலாம்

கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கும் தீங்கு ஏற்படாது- விஞ்ஞானி அபுல்கலாம்

Written By Tamil News on Thursday, January 3, 2013 | 5:17 AM


தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக அச்சம், சர்ச்சை உருவாகியிருக்கும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின் நன்மைகளைப் பற்றியும், இயற்கைச் சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், அணு உலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப்பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக அனுபவத்துடன் ஆராய்ந்து அதை மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று விதமாக பார்க்கலாம். ஒன்று கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள், இரண்டாவது பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு.

நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம்என்ற ஒரு அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம்.

முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம். மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகளை தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம்.

மக்களின் கேள்விகள் என்ன? அவர்களின் நியாயமான பயம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

1. ஜப்பான் புக்குஸிமா அணு உலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர் சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு நியாயமாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.

2. இயற்கை சீற்றங்களினால் அணு உலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்ட் கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத் தன்மை போன்றவைகள் வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

3. அணு சக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து. அணுசக்தி கழிவுகளை கடலில் கலக்கப் போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும் நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன்படும் நீரை மீண்டும் கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் 500 மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.

4. அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்தத்தால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.

5. அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஓட்டம் செய்து பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான வீதி வசதி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை மக்கள் எப்படி தப்ப முடியும்?

6. 10000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை.

7. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல் நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும் கிடைக்கவில்லை.

இது போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. சரியான கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச் செல்ல முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அணுசக்தி துறையோடு எனக்கு இருந்த 20 வருட அனுபவத்தின் காரணமாகவும், அணுசக்தி விஞ்ஞானிகளோடு எனக்கு இருந்த நெருக்கமான தொடர்பாலும், சமீப காலங்களில் இந்தியாவிலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அணுசக்தி, துறையை சேர்ந்த ஆராய்சி நிலையங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுடனும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் கலந்துரையாடிய அனுபவத்தாலும், கடந்த 4 வருடங்களாக இந்திய கடற்கரை ஓரம் அமைந்துள்ள எல்லா அணுசக்தி உற்பத்தி நிலையங்களுக்கும் சென்று, அந்த அணுசக்தி நிலையங்களின் உற்பத்தி செயல் திறனை பற்றியும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளேன்.

அதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பார்வையிட்டு அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பல்வேறு காரணிகளைப் பற்றி அதாவது கடலோரத்தில் உள்ள இந்திய அணுமின் சக்தி நிலையங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் என்ன வித்தியாசம், அதன் ஸ்திர தன்மை, பாதுகாப்பு தன்மை பற்றியும், இயற்கை பேரிடர் மற்றும் மனித தவறின் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்ய முடியும் அதன் தாக்கத்தை சமன் செய்யவும் செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் பற்றியும், செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளேன்.

என்னுடைய இருபதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போதும், ஆராய்ச்சி நிலையங்களிலும், கல்வி போதிக்கும் என்னுடைய பணி மூலமாகவும் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாகவும், அணுசக்தியைப் பற்றியும், எரிசக்தி சுதந்திரத்தைப் பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கங்களையும் ஆராய்ச்சி விளக்கங்களையும் விரிவாக விவாதித்தோம்.

அதன் விளைவாக நான் எனது நண்பர் வி. பொன்ராஜுடன் சேர்ந்து இந்தியா 2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவிற்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்ததின் பயனாக ஆய்வின் ஷிநிதீ8ளின் விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்படவில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த உலகிலே வந்திருக்கிறது.

2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது தான் நம் மக்களின் இலட்சியம். நம்பிக்கையோடு நாம் உழைத்தால் தான் எண்ணிய இலக்கை அடைய முடியும். அதில் பல வெற்றிகளும் உண்டு, பிரச்சினைகளும் உண்டு, அதை சமாளிக்கும் திறமையும் இந்தியாவிற்கும் உண்டு.

இந்த உணர்வோடு, நாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும், மக்களின் நியாயமான கேள்விகளையும், உண்மையான பயத்தையும் போக்கும் வகையில் ஒவ்வொன்றாக பார்ப்போம். அதாவது ஒரு அணுமின் நிலையத்தைப் பற்றியும் அதன் பாதுகாப்பை பற்றியும் நாம் முக்கியமாக பார்த்தோமேயானால், நான்கு பாதுகாப்பு விடயங்கள் முக்கியமானவை.

1. Nuclear Criticality Safety  நீடித்த தொடர் அணுசக்தி கதிர்வீச்சினால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால் அதில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தொழில்நுட்பம்.

2. Radiation Safety அணுக்கதிர் வீச்சுள்ள எரிபொருள்களை எப்படி கையாளுவது என்பது பற்றியும், உலக தரத்திற்கேற்ப அதை எப்படி எந்த முறையில் பாதுகாப்பாக உபயோகிப்பது என்பது பற்றிய வழிமுறை.

3. Thermal Hydraulic Safety  அணு உலையில் எரிபொருளை குளிர்விக்கும் அமைப்பு மின்சார தடையால் இயங்கவில்லை என்றால், அதை எப்படி மின்சாரம் இல்லாமலேயே இயங்க வைத்து மாற்று மின்சாரம் வரும் வரை உருகி வெப்பநிலை கூடி வெடிக்காமல் தடுக்கும் அமைப்பை எப்படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இயக்குவது?

4. Structural integrity Safety அணு உலையும் அது தொடர்பாக மற்றைய அமைப்புகளின் கட்டமைப்பையும், அது அமைக்கப் பெறும் இடத்தின் வலிமையையும், இயற்கைப் பேரிடர் நேர்ந்தாலும் அதை எப்படி நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை.

இந்த நான்கு அமைப்புகளும் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா, தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தான் முதலில் பார்க்க வேண்டும். கூடங்குளம் அணு உலை பற்றிய எங்களது முக்கியமான முதல் ஆய்வின் படி இந்த நான்கு பாதுகாப்பு விதிமுறைகளும், சரியான விதத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது.

அது சோதித்தும் பார்க்கப்பட்டிருக்கிறது, பரிசோதனையில் அது நன்றாக செயல்படுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. 3 வது பாதுகாப்பு கூடங்குளத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பாகும். எனவே கூடங்குளம் மக்களுக்கு அணு உலையின் பாதுகாப்பை பற்றிய சந்தேகம் வேண்டாம்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger