கிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு சரியானதா? - Tamil News கிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு சரியானதா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » கிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு சரியானதா?

கிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு சரியானதா?

Written By Tamil News on Saturday, December 15, 2012 | 6:59 PMநாளாந்தம்  தமிழ் ஊடகங்கள் சிலவற்றின் செய்திகளை அவதானிக்கின்ற போது அவை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாட்டையும் தேர்தலுக்கு பிறகு வேறு அபிப்பிராயத்தையும் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டது. தேர்தலுக்கு முன்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பாராட்டிய தமிழ் ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்திய காலங்களில் அதன் மீது வசைபாடி வருகின்றன. இவற்றுக்கான காரணம் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் காட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைக்கும் என்றிருந்த எதிர்பார்ப்பானது நிறைவேறாமல் போனமையாகும். தமிழ் தரப்பு ஊடகங்கள் தமது நோக்கம் கை கூடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லையென்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் மீது அவதூறுகளைப் பரப்புவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இற்றைவரைக்கும்  இலங்கையின் இன அரசியல் முரண்பாட்டுக் களத்தில் தமிழர் தரப்புக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையே மிக ஆழமான சிநேக பூர்வ அரசியல் புரிந்துணர்வு இருந்திருக்கவில்லை. சிறிய புரிந்துணர்வுகள் இருந்து வந்தபோதும் அவை பல்வேறு சக்திகளால் சீரழிக்கப்பட்டே வந்திருக்கின்றன.

அண்மைக் காலமாக இதில் சற்று ஆரோக்கியமான சூழல் உருவாகியிருப்பதனை மறுக்க முடியாத போதிலும் இருதரப்பினரும் இணைந்து பணியாற்றுவதற்கான முதிர்ச்சி இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை. இவற்றுக்கு பல்வேறு வெளிப்புற உட்புற முரண்பாட்டுக் குழுக்களின் அழுத்தங்களும் காரணமாக அமைந்திருக்கின்றன.

தமிழ் தரப்பு அரசியலானது தமக்கான இனத் தீர்வு முயற்சியே தமது இறுதி இலக்கு என்கின்ற நிலைப்பாட்டுக்கு அமைவாகவே எப்போதும் சிந்தித்து வருகிறது. அதற்காக அவர்கள் பாராளுமன்றத்தையும் கூட துச்சமாக கருதும் நிலைப்பாட்டுக்கு வருபவர்களாவர். 1983 ஆம் ஆண்டு பிரதான எதிர்க் கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியானது தமது 16 ஆசனங்களையும் உதறித் தள்ளிய வரலாறு அவர்களுக்குண்டு. அது போல 1989 பொதுத் தேர்தலின் பின்னர் ஈரோஸ் இயக்கம் தமது பாராளுமன்றப் பிரதிநிதிகளை தொடர்ச்சியாக ராஜினாமாச் செய்து கொண்டிருந்த வரலாறுகளும் அவர்களுக்குண்டு. அப்படியானால் தமது பிரதான நோக்கத்தினை அடைந்துகொள்வதற்காக அவர்கள் ஏன் கிழக்கு மாகாண சபையையும் அவ்வாறு பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.

இன்னும் முழுமையான அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து விடுவிக்கப்படாத நிலையில் மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு கூட்டுச் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க கூடிய சூழ்நிலையில், தமிழர் தரப்பு தமது புலம்பெயர் அறிவுரைப்படி கூட்டணியை வாபஸ் வாங்கிக் கொண்டால் முஸ்லிம் காங்கிரஸின் நிலைதான் என்னவாகக்கூடும்?

தமிழர் தரப்பு தமது பிரத்தியேக அரசியல் நோக்கங்களை நிறைவேற்று வதற்கான மசோதாக்களை கொண்டு வருகின்ற போது அவற்றினை முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரிக்கக் கூடிய பட்சத்தில் அது தென்னிலங்கை யில் வேறு விபரீதங்களை உருவாக்கலாம். அன்றியும் முழுக்கவே தமிழர் தரப்பு நியாயங்களை மட்டும் தீர்க்கக் கூடிய மசோதாக்களை அங்கீகரிக்க முடியாத நிலைப்பாடு முஸ்லிம் காங்கிரஸ¤க்குள் வருகின்ற போது கூட்டணிக்குள் குழப்பங்கள் ஏற்படக்கூடும்.

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் மூலமாக மத்திய அரசானது பல்வேறு தடைகளை ஏற்படுத்தக் கூடும். அதன்போது வாக்களித்த மக்களிடமிருந்து மாகாண சபை ஆட்சியாளர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக மாறும் நிலை ஏற்படலாம். சிறுபான்மைக் கட்சிகளிலிருந்து உதிரிகளாக உறுப்பினர்களை அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்காது என்று கூறுவதற்கில்லை. அப்படி அமைகின்ற சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸானது மேலும் பலவீனப்படுமேயொழிய பலமுடையதாக்காது.

முழு முஸ்லிம் சமூகமும் ஒற்றுமைப்பட்டு மாகாண சபையைக் கைப்பற்றுவதே நியாயமான முடிவாக அமையக் கூடியது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகும். முழுமையான தீர்வுக்குப் பின்னரான மாகாண அதிகாரச் சமநிலையும் யாப்பு ரீதியான பாதுகாப்பும் உருவாக்கப்படும் சூழலில் தமிழர் தரப்பும் முஸ்லிம் தரப்பும் சிநேகபூர்வமான கூட்டணியை அமைத்து கிழக்கு மாகாண சபையை ஆளுலாம். அதுவரை இரண்டு தரப்பினருக்குமிடையே ஆழமான புரிந்துணர்வும் இறுக்கமான அரசியல் நட்பும் பரந்துபட்ட விட்டுக் கொடுப்புகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியே உள்ளது.

இஸ்திரமான அரசாங்கமொன்று உள்ளபோது அதன் பங்காளியாகவும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் மேற்கூறிய அம்சங்களை கருத்தில் கொண்டு எடுத்த முடிவானது சரியான தருணத்தில் எடுத்த மிகச் சிறந்த முடிவாகவே கருதப்படக்கூடியது. மேலும் முஸ்லிம் முதலமைச்சரையும் நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் அது உருவாக்கியிருக்கிறது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger