கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11.22 - Tamil News கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11.22 - Tamil News
Headlines News :

Hottest List

Home » » கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11.22

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11.22

Written By Tamil News on Tuesday, November 27, 2012 | 6:33 AM


கிழக்கு மாகாண சபை அமைச்சரவைக் கூட்டம் 22.11.2012 ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை இன்று தனது அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிட்டார்.அத்தீர்மானங்களின் விபரங்கள் பின்வருமாறு

1.புதன்கிழமை தினத்தில் விழாக்களை இரத்துச் செய்தல்

கிழக்கு மாகாணத்தில் தூர இடங்களிலிருந்து திருகோணமலை நகரில் உள்ள திணைக்கள தலைவர்களை சந்திக்க வரும் பொது மக்களின் நன்மை கருதி புதன்கிழமைகளில் விழாக்களை நடாத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் புதன்கிழமை பொது மக்களை சந்திக்கும் தினமாக பிரகடனப்படுத்துமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக அமைச்சரவை வாரியம் அதற்கான அங்கீகாரத்தினை வழங்கியது.

2.கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட கொடுப்பனவு

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை வாரியம் இக்கொடுப்பனவு தொடர்பான நிதி அறிக்கையினை அமைச்சரவை வாரியத்திற்கு சமர்பிக்குமாறு முதலமைச்சரின் செயலாளரை அமைச்சரவை வாரியம் கேட்டுக் கொண்டது.

3.சிரேஷ்ட ஊடகவியளாளர்களை கௌரவிப்பது

கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியளாளர்களை கௌரவிப்பது தொடர்பாகவும் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை வாரியம் அதனை ஏற்றுக் கொண்டதுடன், இந்நிகழ்வினை திருகோணமலை மாவட்டத்தில் நடாத்துவதற்கும் அங்கீகாரம் வழங்கியது.

4.கிழக்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள திணைக்களங்களுக்கு 15 மாகாண சபை உறுப்பினர்களை நியமனம் செய்தல்

கிழக்கு மாகாண சபை அமைச்சுக்களின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேரை நியமிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட தீர்மானத்தை அமைச்சரவை வாரியம் ஏற்றுக் கொண்டதுடன் 15 மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் விசேட போக்குவரத்து கொடுப்பனவாக 40000 ரூபா வழங்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

5.கிழக்கு மாகாண அமைச்சுக்களின் இணையத்தள சேவையை மேம்படுத்தல்

கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் இணையத்தள சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்..மன்சூரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சவை பத்திரத்தை ஏற்றுக் கொண்டு கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் இணையத் தளங்களை சமகால நவீனத்திற்கு ஏற்றவகையில் அமைச்சுகளின் நோக்கங்களை அறியக் கூடிய வகையில் மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அனுமதி வழங்கியது.

6.உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாட நெறியில் சித்தியடைந்தவர்களுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்குதல்

கிழக்கு மாகாணத்தின் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாட நெறியில் சித்தியடைந்தவர்களுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியில் சித்தியடைந்தவர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாட நெறியில் சித்தியடைந்தவர்களுக்கு இந்நியமனம் வழங்கப்படவில்லை.

எனவே திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்க வேண்டுமென வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை வாரியம் இந்நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

7.மாகாண சபை உறுப்பினர்களின் விசேட கொடுப்பனவு

கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதற்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கும் 5 குழுக்கள் தெரிவு செய்யப்ட்டுள்ளது. இக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசேட கொடுப்பனவாக 9000 ரூபா வரை வழங்குவதற்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை ஆராய்ந்த அமைச்சரவை வாரியம் அதனை ஏற்றுக் கொண்டது.

8.தெஹியத்தகண்டி பிரதேசத்தில் மேலதிக பிரதேச கல்விக் காரியாலயமொன்றை உருவாக்குதல்

42 கிராமங்களை உள்ளடக்கிய தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் 50 பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றது. இப்பகுதியில் ஏற்கனவே ஒரு பிரதேச கல்வி காரியாலயம்; இயங்கி வருகின்றது. இப்பிரதேச கல்வி காரியாலயத்தில் இக்கிராமங்களிலுள்ள 50 பாடசாலைகளையும் நிர்வகிப்பதில் பல இடர்பாடுகள் காணப்படுவதால் தெஹியத்தகண்டி கிழக்குப் பிரதேச கல்விக் காரியாலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை அமைச்சரவை வாரியம் ஏற்றுக் கொண்டு அதற்கான அங்கீகாரம் வழங்கியது.

9.கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி திட்டங்களை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி காலத்திற்குள் நிறைவு செய்தல்

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை தேசத்திற்கு மகுடம் காலப்பகுதிக்குள் நிறைவு செய்து மக்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன் புதிதாக ஆரம்பிக்கபடவுள்ள அபிவிருத்தி திட்டங்களை இக்காலப் பகுதிக்குள் ஆரம்பிப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

10.கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக்களங்களுக்கு பட்டதாரிகளை நிரந்தர நியமனம் செய்தல்

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கு 402 பட்டதாரிகளுக்கு நேர்முக பரீட்சை நடைபெற்றுள்ளது. மேலும் 362 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும் நேர்முக பரீட்சை நடைபெற்று வருகின்றது. மேலும் 562 பட்;டதாரிகளுக்கு நேர்முக பரீட்சை நடாத்தி அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அங்கீகாரத்தை மத்திய அரசிடம் கிழக்கு மாகாண சபை கோரியுள்ளது.


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger